இரவுத் தூக்கம் நிம்மதியாக இருந்தால் உடலில் வேறெந்த பெரிய நோயும் இல்லை என்று சொல்லலாம்.சிறு வயதினருக்கு தேர்வு பயம், தலைவலி உட்பட சிறிய தொந்தரவுகளினால் கூட தூக்கம் தடைபடலாம். அது விரைவில் சரியாகி விடும்.
30 வயதுக்கு மேல் ஆண், பெண் இருவருக்குமே தூக்கமின்மை பிரச்னை தொடங்குகிறது. உடலில் ஏற்கனவே இருக்கும் சர்க்கரை, ரத்தஅழுத்தம், சிகிச்சை பெற்று வருபவர்கள், அடிக்கடி தலைவலி பிரச்னை உள்ளவர்கள், புற்றுநோய் போன்ற நோய்களுக்கு ரேடியோ தெரபி மற்றும் கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளும் நபர்கள் தூக்கமின்மை பிரச்னையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அதிக உடல் எடை காரணமாகவும் தூக்கம் தடைபடும். பகல் நேரத்தில் தூங்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் உறக்கம் பிரச்னையே. இரவில் நீண்ட நேரம் தொலைக்காட்சி, கணணி பார்ப்பது மற்றும் மனக்குழப்பம், மன அழுத்தம் உட்பட உளவியல் சிக்கல் இருந்தாலும் தூக்கம் பிரச்னையாக மாறும்.
தூக்கமின்மையின் காரணமாக எந்த விஷயத்திலும் இவர்களால் முழு ஈடுபாடு காட்ட முடியாது. கவனக்குறைவால் மற்ற வேலைகளும் கெடும். தூக்கம் தடைபட்டு அடிக்கடி எழுந்திருத்தல் போன்ற தொல்லைகள் தொடரும். இதனால் உடல் சோர்வு, தெளிவாக முடிவெடுக்கத் தெரியாமல் திண்டாடுதல், உடல் தளர்ச்சி, யோசிக்க முடியாமல் திணறுதல் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாவார்கள். தூக்கமின்மை தொடங்கும் போதே மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்ளலாம்.
மூளையில் சுரக்கும் செரோட்டின் அளவு குறையும் போது தான் தூக்கமின்மை பிரச்னை உருவாகிறது. குழந்தைகளுக்கு சிறு வயதில் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம், குழந்தைகள் பயங்கரமான கனவுகளால் விழிக்க வாய்ப்புள்ளது. அவர்களுக்கு கனவு பற்றி சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மரபு ரீதியான இரவு நேர பய உணர்வும் தூக்கத்தின் எதிரியே. தூக்கத்தில் எழுந்து நடப்பது, தானாகப் பேசுவது போன்ற குறைபாடுகளும் குழந்தைகளிடம் காணப்படலாம். இது குறித்து மருத்துவரிடம் ஆலோசித்து சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் குழந்தைகள் நிம்மதியான தூக்கம் பெற முடியும்.
பாதுகாப்பு முறை: தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளை மட்டுமே இரவில் எடுத்துக் கொள்ள வேண்டும். தூக்கம் பிரச்னை உள்ளவர்கள் காபி குடிப்பதை கைவிட வேண்டும். காபியில் இருக்கும் காபின் காரணமாக மூளையில் செரோட்டின் சுரப்பு அளவு குறையும். இரவு படுக்கைக்கு செல்லும் முன் வெந்நீரில் குளித்தால் நன்றாக தூக்கம் வரும்.
தினமும் முறையான நேரத்துக்கு தூங்கச் செல்லுதல், தூங்கும் இடத்தில் அதிக வெளிச்சம் இன்றி இருத்தல், மதிய நேரத்தில் குட்டித் தூக்கம் தவிர்த்தல், மனக்கவலைகளை ஓரம் கட்டுதல் வேண்டும். படுக்கையில் அலுவலகப் பணிகள் செய்வதைத் தவிர்க்கவும். இரவில் ஒரு டம்ளர் பால் அருந்தவும். இரவில் மது அருந்தும் பழக்கத்தை கைவிடவும்.
மூளையைத் தூண்டும் மருந்துகளைத் தவிர்க்கவும். புகை பிடிப்பதும் நல்லதல்ல. பரபரப்பான வாழ்க்கை முறையை மாற்றி நிதானப்படுத்திக் கொள்ளவும். மன அமைதிக்கான பயிற்சிகள், போதுமான உடற்பயிற்சியும், சத்தான உணவுகளும் இனிய தூக்கத்துக்கு வழிவகுக்கும்.
Source:
http://www.lankasritechnology.com/view.php?203609F220eZnBd34ea4mOl34cbdQMAAcddcoKMQKdbc4TlOmae42dBnZ3e023F90602