Search This Blog

Monday, September 6, 2010

விடியலை நோக்கி...30-10-1995

யாழ்பாணத்தில் இருந்து மிருசுவில் வரை..ஒரு திகில் அனுபவம்...

1995ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து லட்சகணக்கான மக்கள் இடம்பெயர்ந்தது உலகறிந்த விடயம்..அந்த பல லட்சம் பேரில் நானும் ஒருவன்..அப்போது எனக்கு சுமார் பத்து வயது இருக்கும்.. அந்த இடம்பெயர்வு பற்றி தற்போது என் நினைவில் நிற்கும் அனுபவங்கள்,துன்பங்கள்,சுவாரசியங்கள் பற்றிய ஒரு அனுபவ பகிர்வே இந்த பதிவு..

ஐப்பசி முப்பதாம் திகதி..ஒரு திங்கள் மாலை நேரம்..ஒரு ஐந்து,ஐந்தரை மணி இருக்கும்...பாடசாலையால் வந்து வெகுநேரம் கழித்து தான் மதிய உணவு உண்ட ஞாபகம்..சோறும் கத்தரிக்காய் குழம்பும் தான் சாப்பாடு..வெளியிலே முற்றத்தில் விளையாடிகொண்டிருந்தேன்..அப்போது சைக்கிளில் பரபரப்பாக எனது அக்காவின் நண்பி எங்களது வீட்டை நோக்கி வந்தார்..அக்காவும் சும்மாதான் விசிட்டுக்கு வருகிறார் என்று நினைத்து வெளியில் சென்று வரவேற்றார்..ஆனால் வந்த நண்பியோ பரபரப்பாக செய்தியை கூறினார்..."யாழ்பாணத்தை நோக்கி இராணுவம் வருகிறது...கெதியாக ஓடுங்கள் என்று கூறிவிட்டு அவர் சென்றுவிட்டார்.."

வீதிகளில் எல்லோரும் பரபரப்பாக கையில் கிடைத்த சாமான்களோடு ஓட தொடங்கிவிட்டனர்..வீட்டில் யாருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை..உடனடியாக அம்மா அறையின் உள்ளே சென்று என்னுடைய மற்றும் என் சகோதர சகோதரிகளின் முக்கியமான ஆவணங்களை(இலங்கையில் தமிழன் ஆடை இல்லாமல் செல்லலாம்,ஆனால் ஆவணம் இல்லாமல் செல்ல முடியாது)மற்றும் சில ஆடைகளை எடுத்து ஒரு பையில் போட்டு கொண்டு வந்தார்..தாத்தாவும்,பாட்டியும் அரிக்கன் லாம்பு என்று சொல்லப்படும் மண்ணெண்ணெய் விளக்குகளை தயார் செய்தனர்..சகோதரிகள் இருவரும் சைக்கிள்களை தயாராக வைத்திருந்தனர்..அப்போது யாழ்பாணத்தில் சைக்கிள்கள்தான் தேசிய வாகனம்..அப்பா அப்போது கொழும்பில் இருந்தபடியால் அவர் இந்த கொடூரத்தில் மாட்டவில்லை..

எல்லோரும் முற்றத்தில் நின்றுகொண்டு எங்கு செல்வதென்று தெரியாமல் தினறிகொண்டிருந்தோம்..அப்போது வீதிகளில் மக்கள் நூற்றுகணக்கில் குவிய தொடங்கிவிட்டனர்...நாங்கள் முற்றத்தில் நிற்கும் போது தூரத்தில் என் பெரியம்மா குடும்பத்துடன் வந்துகொண்டிருந்தார்..ஒருவாறாக எங்கள் குடும்பமும் பெரியம்மா குடும்பமும் ஒன்று சேர்ந்து ஒரு முடிவெடுத்தனர்..மிருசுவில் பகுதியில் உள்ள எங்கள் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்று தங்குவதாக முடிவு எடுக்கப்பட்டது..செல்லும் வழியில் அரியாலை பகுதியில் வசிக்கும் என்ன சித்தி குடும்பத்துடன் இணையும் நோக்குடன் எல்லோரும் புறப்பட தயாரானோம்..அப்போது ஆரம்பமானது எனது முதல் இழப்பு..

எனது பெரியம்மாவின் மகன் சீசர் எனும் ஒரு அழகிய பொமனேரியன் நாய்குட்டி வைத்திருந்தார்..எனக்கு அதன் மேல் அலாதி பிரியம்..ஒவ்வொரு வெள்ளி கிழமை மாலையும் பெரியம்மா வீடிற்கு சென்று அதை என் வீடிற்கு எடுத்துவந்துவிடுவேன்..மறுபடியும் ஞாயிறு மாலை திருப்பி கொடுத்துவிடுவேன்..இந்த முறை சீசர் என் வீட்டிலேயே நின்றது.. எல்லோரும் கிளம்பும் போது நான் என் அம்மாவிடம் சீசரை பற்றி கேட்டேன்..அப்போது என் ஒன்று விட்ட சகோதரி ஒருவர் சீசரை தான் சைக்கிளில் கொண்டுவருவதாக கூறினார்..ஆனால் அங்கிருந்த பெரியவர்கள் அதை விரும்பவில்லை...நாங்களே உயிரை கையில் பிடித்துகொண்டு செல்கிறோம்...போகும் வழியில் என்ன நடக்கும் என்று தெரியாது..இந்த பிரச்னையில் நாயை வைத்து பராமரிக்க முடியாது..அதை விட்டு விட்டு வரசொன்னர்கள்..வேறு வழி இல்லாமல் சீசருக்கு சில பாண் துண்டுகளையும்,தண்ணீரையும் வைத்துவிட்டு கனத்த மனதுடன் புறப்படதயாரானேன்...இறுதியாக சீசர் என்னை பார்த்து வாலாட்டி குரைத்தது இன்றும் என் நெஞ்சில் முள்ளாக குற்றுகிறது...

அப்போது நேரம் ஏழு மணியாகிவிட்டது..சிறுவயதில் எனக்கு இருபத்துநான்கு மணிநேரமும் மணிக்கூடு கட்டும் பழக்கம் இருந்தது..ஆனால் இப்போது செல்போனில் தான் மணிபார்கிறேன்...அந்தி சாய்ந்து இலேசாக இருள் பரவ தொடங்கியது..அரிக்கன் லாம்புகள் தங்கள் வேலையை செய்ய தொடக்கி விட்டன..மனதில் ஒரு இனம்புரியாத பயத்துடனும்,எதிர்பார்ப்புடனும் அம்மாவின் கையை பற்றியபடி நடந்து செல்ல தொடங்கினேன்..குளிர்காற்றில் மேனி எல்லாம் சிலிர்த்தது...சந்தியை அடைந்ததும் நாலா புறத்தில் இருந்தும் மக்கள் குவியத்தொடங்கினர்..கூட்டம் அதிகம் ஆன படியால் சைக்கிளை உருட்டியே செல்லவேண்டியிருந்தது...டிராக்டர்கள்,லாரிகள்,பைக்குகள்,சைகிள்கள் என எல்லாவற்றிலும் மக்கள் கூட்டம்...சிலர் ஆடு,கோழிகளை கூட ஏற்றிக்கொண்டு வந்தனர்..எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம்..தூரத்தில் அரிக்கன் லாம்புகள் புள்ளி புள்ளியாக ஒளிவீசிக்கொண்டிருந்தன...

சுமார் மூன்று மணி நேரம் நடந்திருப்பேன்...௦மழை இலேசாக தூறிகொண்டிருன்தது.... கால்கள் வலித்ததாக எனக்கு தெரியவில்லை..மக்கள் கூட்டம்...பரபரப்பு...இரவு நேரம்..மர்மமான சூழல்.ஒரு இனம் புரியாத த்ரில் என்னை சூழ்ந்து கொண்டது..வர வர மக்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே சென்றது..அப்போது எங்கள் நெருங்கிய குடும்ப நண்பர்கள் இருவரின் குடும்பங்களும் எங்களுடன் இணைந்து கொண்டனர்.திடீரென்று எங்கள் பெரியம்மா கதறும் சத்தம் கேட்டது..என்னவென்று சென்று பார்த்தல்,அவரின் இளைய மகனை காணவில்லை..எல்லோருக்கும் தூக்கிவாரி போட்டது..எனது ஒன்றுவிட்ட சகோதரனின் நண்பனின் சைக்கிளில் தான் எனது இளைய ஒன்று விட்ட சகோதரன் வந்துகொண்டிருந்தான்..அப்போது எங்கள் குடும்ப நண்பர்களில் ஒருவர் மோட்டார் சைக்கிள் வைத்திருந்தார்..அவர் தான் இவர்களை கண்டுபிடித்து கூட்டிகொண்டு அரியாலைக்கு வருவதாகவும்,எங்கள் எல்லோரையும் அரியாலைக்கு செல்லும் படியும் கூறினார்..
சரி என்று எல்லோரும் புறப்பட ஆயத்தமானோம்..அப்போது தான் எங்களுக்கு இரண்டாவது அதிர்ச்சி காத்திருந்தது..கூடவே வந்து கொண்டிருந்த பாட்டி என்ன ஆனார் என்று யாருக்கும் தெரியவில்லை..

நாலா பக்கமும் மக்கள் வெள்ளம்..இந்த கூட்டத்தில் எங்கு சென்று தேடுவது..யாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை..அப்போது எங்கள் தாத்தா சொன்னார்.."பாட்டிக்கு ஒன்றும் ஆகியிருக்காது..இந்த கூட்டத்தில் தேட சென்றால் திக்கு தெரியாமல் தொலைந்து விடுவோம்..எல்லாம் கடவுள் பார்த்துகொள்வார்.."..அனைவரும் கனத்த மனதுடன் இறைவன் மீது பாரத்தை போட்டு விட்டு பயணத்தை தொடர்ந்தோம்..ஒரு இருபது நிமிடங்கள் நடந்திருப்போம்..தூரத்தில் சாலை ஓரம் மக்கள் கூடி நிற்பது தெரிந்தது..அப்போது மழை ஓரளவுக்கு பலமாக பெய்துகொண்டிருந்தது..நாங்கள் மெதுவாக கூட்டத்தை நெருங்கினோம்..எனது ஒன்று விட்ட சகோதரன் கூட்டத்தில் நின்ற ஒருவரிடம் என்ன நடந்தது என வினாவினார்...யாரோ ஒரு வயதான பெண்மணி சாலை ஓரம் இருந்த கிடங்கிற்குள் வழுக்கி விழுந்துவிட்டாராம்..அவரை தூக்கும் முயற்சி நடந்து கொண்டிருந்தது...வெளியே வந்த அந்த பெண்மணி வேறு யாரும் இல்லை..என் பாட்டி தான்..எல்லோருக்கும் போன உயிர் திரும்பி வந்தது..நல்லவேளை கடவுள் புண்ணியத்தில் காயங்கள் ஏதும் இல்லை..கடவுளுக்கு நன்றிசெலுத்தி விட்டு மீண்டும் பயணத்தை தொடர்ந்தோம்...

அப்போது நேரம் நள்ளிரவை தாண்டி இருந்தது..கும்மிருட்டு எங்கும் சூழ்ந்திருந்தது..வாகனங்களின் சத்தத்தையும் தாண்டி வண்டுகளின் இரைச்சல் காதை பிளந்தது...சிறிது நேரத்தில் நடக்கவிருக்கும் களேபரத்தை அறியாதவனாய் அம்மாவின் கையை பற்றியபடி நடந்துகொண்டிருந்தேன்..திடீரென்று தூரத்தில் வெடிச்சத்தங்கள் கேட்டன..எங்கேயோ இராணுவத்திற்கும்,புலிகளுக்கும் இடையில் சண்டை நடைபெற்றுகொண்டிருந்தது..மக்கள் மத்தியில் ஓர் இனம்புரியா பயம் தொற்றி கொண்டது..வினாடிக்கு வினாடி சலசலப்பு அதிகரித்து கொண்டே சென்றது..எல்லோரும் நடப்பதை நிறுத்திவிட்டனர்..எனக்கும் இலேசாக பயம் தொற்றிகொண்டது..எரியிற நெருப்பில் எண்ணையை ஊற்றும் செயலாக தூரத்தில் குண்டுவீச்சு விமானங்களின் ஒலி கேட்டது..அவளவு தான் மக்கள் நாலா புறமும் சிதறி ஓட தொடங்கிவிட்டனர்..வாகனத்தின் விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டன..அரிக்கன் லாம்புகள் தணிக்கபட்டன..எல்லோரும் சைக்கிளை போட்டு விட்டு தரையில் படுத்துகொண்டனர்.(அந்த கால கட்டத்தில் யாழ்பாணத்தில் விமான ஒலி கேட்டால் எல்லோரும் ஓடிச்சென்று தரையில் படுத்துவிடுவோம்)நானும் சாலை ஓரத்தில் தரையில் குப்பற படுத்துக்கொண்டேன்..எங்கும் நிசப்தம்..விளக்குகள் அணைகபட்டத்தில் இருள் எல்லா இடமும் சூழ்ந்து கொண்டது..ஒரு இருபது நிமிடங்கள் படுத்திருப்போம்..விமானங்களின் சத்தத்தை காணவில்லை..அங்கொன்றும்,இங்கொன்றுமாக தூரத்தில் வெடிச்சத்தங்கள் கேட்டவண்ணம் இருந்தன..

நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக வழமைக்கு திரும்பியது..மறுபடியும் கூட்டம் நகர தொடங்கியது..நானும் எழுந்து நடக்க தொடங்கினேன்..வீதியில் படுத்ததில் உடம்பெல்லாம் ஒரே சேறு...பெய்த மழையில் உடம்பெல்லாம் தெப்பமாக நனைந்திருந்தது..போத குறைக்கு குளிர்காற்று வேற....இப்போது என் கால்கள் சற்று வலிப்பதை உணர்ந்தேன்..அம்மாவிடம் கால்கள் வலிப்பதாக கூறினேன்..கடைசியாக என்சகோதரி அவர் சைக்கிளில் என்னை ஏற்றி உருட்டி கொண்டு வந்தார்..இப்போது நேரம் நள்ளிரவை தாண்டியிருந்தது..கடைசியாக எல்லோரும் அரியாலையில் உள்ள எங்கள் சித்தி வீட்டை அடைந்தோம்.. அங்கு எங்கள் சித்தி குடும்பம் சாமான்களை கட்டிக்கொண்டு எங்களை எதிர்பார்த்துக்கொண்டு நின்றனர்..அங்கு சிறிது நேரம் எல்லோரும்இளைப்பாறினோம்..இருந்த உணவை எல்லோரும் அவசரமாக பகிர்ந்து உண்டோம்..பெரியம்மா உணவு ஏதும் உட்கொள்ளாமல் சோகமாய் இருந்தார்...இதுவரைக்கும் அவரின் மகனை பற்றியோ,தேடி சென்றவர் பற்றியோ எந்த தகவலும் இல்லை..சுமார் ஒரு மணி நேரம் போயிருக்கும்..முற்றத்தில் ஒரு பைக் சத்தம் கேட்டது...எல்லோரும் ஓடி சென்று பார்த்தோம்..தொலைந்து போன பெரியம்மாவின்,மகனும், தேடிபோனவரும்,மூத்த மகனின் நண்பரும் நின்றுகொண்டிருந்தனர்...ஒரு சந்தியில் பிழையான திசையில் திரும்பியதால் இவர்கள் எங்களைவிட்டு பிரிந்து சென்றிருகிறார்கள்..தவறை உணர்ந்து திரும்பி வரும்போது தேடபோனவரின் கண்களில் அதிர்ஷ்டவசமாக பட்டுள்ளனர்.. எல்லோருக்கும் அப்போதுதான் வயிற்றில் பால்வார்த்த மாதிரி இருந்தது..எல்லோரும் மறுபடியும் ஒன்றுசேர்ந்த மகிழ்ச்சியில் இறைவனுக்கு நன்றிசெலுத்திவிட்டு மீண்டும் பயணத்தை தொடரமுடிவுசெய்தோம்..அப்போது எதிர் பாரத விதமாக எங்கள் தாத்தா ஒரு குண்டைத்தூக்கி போட்டார்..

தாத்தா ஏற்கனவே முட்டிவலியால் அவதிபடுபவர்..பலமணிநேர நடை அவரின் முட்டியை பெயர்தெடுத்துவிட்டது...இதற்குமேல் தன்னால் ஒரு அடி கூட எடுத்துவைக்க முடியாது என எங்களுடன் வர மறுத்துவிட்டார்...நாங்கள் எவளவோ கூறியும் பிடிவாதமாக வர மறுத்துவிட்டார்..நீங்கள் போங்கள்..நான் சிறிது நேரம் இளைபாறிவிட்டு வருகிறேன்..என்னை யாரும் ஒன்றும் செய்ய போவதில்லை என கூறி அரியாலை வீட்டிலேயே தங்க முடிவெடுத்துவிட்டார்..அபோது எங்கள் சித்தியின் கணவர் ஒரு ஐடியா சொன்னார்..அரியாலையில் இருந்து மிருசுவில் அவளவு தூரம்இல்லை..முதலில் பெண்கள்,சிறுவர்கள் பாதுகாப்பாக மிருசுவில் செல்லட்டும்..நாளை அல்லது நாளை மறுநாளுக்கிடையில் வாகனத்தில் சென்று தாத்தாவை கூடி வரலாம்என்றார்..யாழ்பாணத்தில் இருந்து அரியாலை சிறிது தொலைவிலேயே இருந்தது..வேறு வழியில்லாமல் தாத்தவிட்கு இரண்டுநாளுக்கு தேவையான உணவு மற்றும் நீரை வைத்துவிட்டு கனத்த மனதுடன் அரியாலை வீட்டில் இருந்து வெளியேறினோம்..இதுவரை காத்த இறைவன் எப்பவும் காப்பார் என்ற நம்பிக்கையுடன் பயணத்தை தொடர்ந்தோம்...

அப்போது நேரம் பின்னிரவை தாண்டியிருந்தது...மழை பெய்து கிரவல் வீதி எல்லாம் ஒரே சேறு..சிறிது தூரத்தில் ஒரு பெரியவெளி தென்பட்டது..கூடவே ஒரு உடைந்த பாலமும் தெரிந்தது...நாவற்குழி பாலம் என நினைக்கிறன்..சரியாக நினைவில்லை..வெளி முழுக்க சேறும் சகதியுமாக இருந்தது..நடக்கவே முடியவில்லை...மிகவும் கஷ்டப்பட்டு அந்த வெளியை கடந்தோம்..அப்போது என் காலில் உள்ள ஒரு செருப்பை காணவில்லை..ஒற்றை செருப்பை வைத்து என்ன செய்வதென்று அதையும் வீசி விட்டேன்..அப்போது காலை விடிந்து விட்டது..சிலமணிநேர வெறுங்கால் நடையின் பின்னர் மிருசுவிலை அடைந்தேன்..அப்போது கால்கள் எல்லாம் பயங்கரமாக வலித்தது..இவளவு பெரிய பிரச்னையில் எந்தவித இழப்புகளும் இன்றி எல்லோரும் தப்பித்தது இறைவனின் செயலென்று தான் கூறவேண்டும்..என் வாழ்நாளிலேயே மறக்கமுடியாத ஒரு பயங்கர அனுபவம் இது....சரி நான் மிருசிவிலிருந்து கொழும்புசென்ற அனுபவத்துடன் அடுத்த பதிவில் சந்திப்போம்...

1 comment:

  1. துயரம்...தமிழன் என்ன பாவம் செய்தான்...

    ReplyDelete